Friday, October 17, 2008

இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சியடையவது ஏன்?

2007 தொடக்கத்திலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்து வந்தது. ஒரு அமெரிக்க டாலருக்கு 39 சொச்ச ரூபாய் என்ற அளவுக்கு செலாவணி விகிதம் ரூபாய்க்கு சாதகமாக மாறியது. இதனால் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட திருப்பூர் போன்ற ஆயத்த ஆடை மையங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப மென்பொருள் துறை ஆகியவை பெரும் நட்டங்களைச் சந்திக்க வேண்டிய நிலை வந்தது. அதே நேரத்தில் இறக்குமதியைச் சார்ந்திருந்த தொழில்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அப்போது குறைய இந்திய ரூபாய்களைச் செலவழிக்க வேண்டிய சாதகமான சூழ்நிலை நிலவியது. ஏனென்றால் ஏற்றுமதியானுலும் இறக்குமதியானாலும் உலக நாடுகள் அமெரிக்க டாலரில் மட்டுமே புழங்குவதை விரும்புகிறார்கள். எனவே நாம் பன்னாட்டு அமைப்பில் தொழில் நடத்த விரும்பினால் முதலில் நம் பணத்தை டாலருக்கு மாற்றியாக வேண்டும். அது போலவே நமக்கும் கிடைக்க வேண்டிய தொகைகள் டாலரிலேயே தரப்படும். இந்திய ரூபாய் டாலருக்கு எதிராகப் பலம் பெற்றதற்கு வளர்ந்து வரும் இந்திய உற்பத்தித் துறையே என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஜூன் வாக்கிலிருந்து இந்த நிலைமை மாறத் தொடங்கியது. பண வீக்கத்தினால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படத் தொடங்கியது. பன்னாட்டுச் சந்தையில் எண்ணை விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவுக்கு அதிகரித்ததே காரணமாகப் பெரும்பாலும் கருதப்படுகிறது. இந்தியா பெரும்பாலனத் தன் எண்ணைத் தேவைக்கு எண்ணை இறக்குமதியையே நம்பியிருப்பதால் அதிகமான டாலர்களைச் செலவழிக்க வேண்டி வந்தது. டாலருக்குத் தேவை அதிகரிக்கும் போதெல்லாம் அந்த ரூபாய்க்கு எதிரான டாலரின் செலாவணி மதிப்பு அதிகரிக்கிறது. இதனால் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு 43, 44 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த நிலையில் தான் அமெரிக்கா தொடங்கி பின்னர் ஐரோப்பா மற்றும் இதர முதலாளித்துவ பொருளாதரங்கள் வாராக்கடன்களாக மாறிய தரம் குறைந்த அடமானக் கடன்கள் (Subprime Mortgage Debts)பாதிக்கத் தொடங்கின. இந்த தரம் குறைந்த அடமானக் கடன்களின் (Subprime Mortgage Debts) மதிப்பு கிட்டத்தட்ட ஏழெட்டு ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும் போலத் தெரிகிறது. ஒரு ட்ரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடியாகும். இந்திய ரூபாயி என்றால் 45 லட்சம் கோடி. அதுவும் ஏழெட்டு 45 லட்சம் கோடிகள். நினைக்கவே தலைசுற்றலாம். ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆயிரம் நேரம் விற்றாலும் இந்தத் தொகை தேராது. இந்தப் பொருளாதார அவலத்தால் பல் முன்னணியான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் பிச்சைக்காரர்களாயின...அதாவது திவாலாயின. அன்றாடப் புழக்கத்திற்கு யாரிடமும் காசில்லை. வங்கிகள் ஒருவருக்கொருவர் கடன் கொடுக்கவும் தயாராயில்லை. இந்த நிலையில் பன்னாட்டு அரசாங்கங்கள் தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள வங்கிகள் மற்றும் பிற பொருளாதார நிறுவனங்களை மீட்பதற்கு அரசு கஜானா அதாவது அரசின் மத்திய வங்கிகளிலிருந்து பணம் வழங்க திட்டங்களை அறிவிக்கத் தொடங்கினர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 700 பில்லியன் டாலர்கள் மீட்புத் தொகைத் திட்டத்தை அறிவித்தார். அதற்கு முன்பே கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சில சொத்து அடமான நிறுவனங்களை அரசுடைமையாக்கச் செலவு செய்தார். இதனால் உலகின் மற்றப் பங்குச் சந்தைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர்கள் அமெரிக்க மத்திய வங்கிக்குள் வெள்ளமெனப் பாயத் தொடங்கின. இதனால் அனைத்துப் பணங்களுக்கு எதிராகவும் டாலரின் மதிப்பு உயர ஆரம்பித்தது. இந்தியா போன்ற எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் மிகவும் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளன. அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறார். இந்நிலையில் அதிகமான உற்பத்திச் செலவால் இந்திய உற்பத்தித் தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனையே முழுக்க முழுக்க நம்பியிருக்கும் இந்திய இதனால் இந்திய தகவல் தொடர்பு தொழில்நுட்ப மென்பொருள் துறையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சுற்றுலாத்துறை, விடுதி மற்றும் உணவகங்கள் ஆகிய அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை இந்த ஆண்டும் இன்னும் வரும் ஆண்டுகளிலும் கடுமையாகப் பாதிக்கலாம். இப்போதைக்கு இந்திய தேசிய ஊடகங்கள் மிகவும் மிகைப்படுத்தித் தம்பட்டம் அடித்து வந்த 'அதிவேக இந்திய வளர்ச்சி' என்னும் புராணக் கதை தற்காலிக முடிவுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

Monday, June 16, 2008

'டாடா' பெருச்சாளிகளிடமிருந்து தென் தமிழகத்தைக் காப்போம்!

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு டாடா உருக்காலை நிறுவனத்தின் தலைவர் பி.முத்துராமனும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் தென்தமிழகத்தில் (குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தில்)டைட்டானியம் தொழிற்சாலையொன்றை அமைப்பது குறித்து ஒப்பந்தமிட்டார்கள். தமிழக அரசு இதன் முகமாக பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களைப் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கு ஒப்படைக்கப் போவதாக அறிவித்தது. அடிமாட்டு விலைக்கு தங்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கித் தொழில் முதலைகளான டாடாக்களிடம் சில கோடிகளை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கொடுக்கத் துணிந்த அரசின் துணிகரத்தைக் கண்டித்து தென்மாவட்டங்களில் மக்கள் பொங்கி ஆர்ப்பாட்டம் நடத்தத் துவங்கினர்.

மக்களின் உணர்வைப் புரிந்து கொண்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். அரசியல் வித்தகர் இராமதாசிலிருந்து நேற்று பெய்த மழையில் இன்னைக்கு முளச்ச காளானாகிய விஜயகாந்த் வரை சென்று தாங்கள் மக்கள் பக்கம் என்று காட்டிக் கொண்டனர். கருணாநிதியோ எதிர்ப்பெல்லாம் அதிமுகவுக்கு ஆதரவான மணல் கொள்ளைக்காரனான வி.வி மினரல்ஸ் குழு தலைவன் வைகுண்டராஜன் கூட்டத்தினரால் தூண்டிவிடப்பட்டது; மற்றபடி மக்களெல்லாம் திட்டத்துக்கு ஆதரவுதான் என சப்பைக்கட்டு கட்டிப் பார்த்தார். ஆனால் எடுபடவில்லை. மக்கள் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் நிலை உருவாக, மக்கள் கருத்து அறிந்த பிறகுதான் எதுவோம் செய்வோம் அதுவரை அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்தி வைக்கிறோம் என்று அறிவித்தார் (மேற்கு வங்கத்தின் சிங்கூர், நந்திகிராம் மற்றும் ஒரிசாவின் கலிங்கநகர் போராட்டங்கள் மற்றும் படுகொலைகள் கருணாநிதிக்கு கதிகலங்க வைத்திருக்க வேண்டும்; சாகிற சமயத்தில் மக்களை வெளிப்படையாக்ப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லையோ போலும்).

டாடா உருக்காலை தலைவர் பி. முத்துராமனோ, தூத்துக்குடியில் டைடானியம் ஆலை நிறுவுவதை ஏதோ பெரிய 'தொண்டு நிறுவனம்' அமைப்பது போல அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். தென்தமிழகம் பொருளாதாரரீதியாகப் பிற்பட்டு இருப்பதாகவும், அதனால் டாடா நிறுவனம் இந்த ஆலையை இங்கு அமைப்பதாகவும் அளக்காமல் அள்ளி விட்டுக்கிட்டிருந்தார் (இன்னமும் இக்கதையை சில பொறுக்கிகள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்). பின்னர் தமிழக அரசு பின்வாங்கி அரசு நிலக் கையகப்படுத்தலில் ஈடுபடாது எனவும் அது டாடாவின் தலைவலி எனவும் கூறிக் கருணாநிதி தன் கையைக் கழுவினார். பொது மக்கள் சிலர் ஏக்கருக்கு 5 லட்சம் கொடுத்தால் தங்கள் நிலத்தைக் கொடுக்கத் தயார் என்று கூற முத்துராமனோ ஏக்கருக்கு ஐம்பதாயிரத்துக்கு மேல் சல்லிக்காசு கூடக் கொடுக்க முடியாது; அவர்க்ள் என்ன தங்கத்தின் மேல் உட்காந்திருக்கிறார்கள் என்ற நினைப்பா? வேண்டுமானால் அந்த மணலை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என வீராப்புப் பேசினார். முதலாளித்துவத்தின் திமிர் எப்படி தாண்டவமாடுகிறது பாருங்கள். ஒரு ஏக்கர் 50 கோடிக்குக் குறையாமல் போகும் காலத்தில் டாடா கனிமவளம் மிக்க்ப் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை 50 கோடிக்குக் கேட்கிறது. கேட்கிறவன் கேணையனா இருந்தா கேப்பையில நெய்யி வடியுதுன்னு கூட சொல்லலாம்....அப்படிங்கிற மாதிரிதான் நம்மவர் கதை இருக்கிறது. உண்மையிலேயே தென்தமிழக மக்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கும் நோக்கத்தோடு வந்திருந்தால் நிலங்களைப் பிடுங்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்குவானேன்? வெட்டுகின்ற கனிமத்திற்கு 'உரிமத் தொகை' அதாவது ராயல்டி கொடுத்து விட்டுப் போக வேண்டியது தானே. வியாபாரம் என்றால் வியாபாரம் பேசாமல் பெரிய பரோபகாரம் பண்ணுவான் போல் பீத்திக் கொள்வானேன்?

உண்மை என்னவென்றால், டைட்டானியம் ஒரு அரிய கனிம வகையைச் சார்ந்தது. டைட்டானியம் இயற்கையிலேயே கடல் இயக்கத்தால் தென்தமிழகக் கடற்கரையில் இடைவிடாமல் குவிந்து வருகிறது. அதனால் தென் தமிழகத்தைத் தவிர இந்த ஆலையை அமைப்பதற்கு உலகத்திலேயே சிறந்த இடம் வேறு இல்லை. அதே நேரத்தில், டைடானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் தொழிற்சாலைகள் சுற்றுப்புறச் சூழலை மிகவும் மாசுபடுத்திப் பாழ்படுத்தக் கூடியவை. அப்பகுதியில் வாழும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாவார்கள். இவற்றைத் தடுக்க வேண்டுமானால் நிறையப் பணம் செலவழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க வேண்டும். ஆனால் பணப் பேராசை பிடித்த பெருந் தொழில் முதலாளிகள் அரசாங்கத்தை லஞ்சம் கொடுத்துச் சரிகட்டி சுற்றுப்புறத்தை மனிதர்கள் வாழ வகையற்றதாக மாற்றி விடுவார்கள். இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளெல்லாம் வளர்ந்த நாடுகளில் செல்லுபடியாகாதென்பதால் தமிழர்கள் போல இளிச்சவாயர்கள் இருக்கும் இடத்தைத் தேடி பார்சிக்களும் பனியாக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டெரிலைட் தூத்துக்குடி வந்த கதையும் இப்படித்தான். அமெரிக்காவில் டைட்டானியம் ஆலை நடத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 'டூ பான்ட்' நிறுவனத்தின் மீது இன்றளவும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற மேற்கத்திய நிறுவனங்கள் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற புல்லுருவிகளின் துணையால் தமிழ்நாட்டைக் காடாக்கத் துணிந்து விட்டார்கள்.

தென்தமிழகத்தில் யாரும் டாடா டைடானியம் ஆலை வரவில்லையென்றால் செத்துப் போய்விட மாட்டார்கள். முதலில் தென்தமிழ்நாடு பின்தங்கியது என்பது தவறான கணிப்பு..இல்லை..தப்புக் கணக்கு. தமிழகத்திலேயே அதிக கல்வி விழுக்காடு அதிக தொழில்நுட்ப மாணவர்கள் மற்றும் சிறந்த பொது சுகாதாரம், விழிப்புணர்வு என எல்லாவற்றிலும் முன்னேறியது தென்தமிழகம். டாடா போன்ற பெரிய 'வெங்காய' தொழிற்சாலைகள் இல்லையென்பதால் பின்தங்கியது என்பது மடத்தனம். அப்படிப் பார்த்தால் பெரும்பாலான டாடா ஆலைகள் இருக்கும் பீகாரும், ஜார்க்கண்டும் அல்லவா முன்னேறிய மாநிலங்களாக இன்று இருக்க வேண்டும்!!! அவற்றின் நிலைமை என்ன என்று எல்லாருக்கும் தெரியும்.

இப்போது மீண்டும் நிலம் கையகப்படுத்துவதில் உதவிசெய்யக் கோரி டாடா தமிழக அரசை அணுகியிருக்கிறது. வேண்டுமானால் உங்கள் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் தொடங்குங்கள் என்று சொல்வதிற்கில்லாமல் கருணாநிதியும் அவர்களுக்குத் தலைவணங்கி இந்த நிலம் பிடுங்கிகளுக்கு உதவி செய்யும் படி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளளார்.

தென்தமிழ் நாட்டு மக்கள் செருப்படி கொடுத்து ஓட ஓட முடுக்கி விட்டால் தான் இந்தக் கொள்ளைக் கும்பல் ஓட்டம் பிடிக்கும்!! அந்த நாள் மிகத் தொலைவில் இல்லை.