Saturday, March 7, 2009

தமிழினம் அழிவதே மேல்!

நாம் ஜப்பானியப் பொருட்களை மதிக்கிறோம். அண்மைக் காலங்களில் சீனப் பொருட்களையும் அரவணைக்கத் தொடங்கி விட்டோம். ஆனால் ஜப்பானியர்களோ, சீனர்களோ தமிழர்களின் உயிரைத் துரும்பாகவும் மதிப்பதாகத் தெரியவில்லை. பெரும்பான்மை சிங்களர்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக புத்த மதவெறி பிடித்த ஜப்பானியர்கள் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று அறிந்தும் தெரிந்தும் தங்களது புத்த சகோதரர்களான இனவெறிச் சிங்களர்களுக்குத் தாராளமான பணத்தை வாரி வழங்குகிறது. சீனர்களோ இந்தியப் பெருங்கடலில் மேலாதிக்கம் செய்யும் பொருட்டு இலங்கையில் கப்பற்தளம் அமைக்க சிங்கள அரசின் ஒத்துழைப்புக்காக படுபயங்கரமானப் போர் ஆயுதங்களை வாரி வழங்குவதோடு தமிழர்களின் இனப்படுகொலையை ஐ.நா-வில் விவாதப் பொருளாக எடுக்க எந்த நாடாவது முன்மொழியும் போது தனக்குள்ள சிறப்பு வீடோ அதிகாரத்தால் விவாதம் நடக்காமல் முறியடித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளும், தாய்மார்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டும் உடல் சிதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வரும் இவ்வேளையில் ஜப்பான் சிங்கள இனவெறி அரசுக்கு 350 மில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய்) வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புத்தரும் காந்தியும் பிறந்ததாகப் பிதற்றிக் கொள்ளும் தில்லிப் பேரரசோ வட்டியில்லாக் கடனாக தமிழன் கட்டிய வரிப்பணத்தையே 4500 கோடி அளவுக்கு தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்த இனவெறி பிடித்தச் சிங்கள அரசுக்குத் தாரை வார்த்துள்ளது. தமிழன் என்ன கிள்ளுக்கீரையா? அப்படித்தான் தெரிகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் போக்கைப் பாருங்கள்! உணர்ச்சி கெட்ட முண்டங்கள் போல் சினிமாவிலும், சில்லறை அரசியலிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

இந்த இனமா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியப் பெருங்கடல் அனைத்தையும் ஆண்டு உலக வாணிகத்தில் கொடிகட்டிப் பறந்த்தது என்று ஐயமுறத் தோன்றுகிறது? 15-ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த சீன மாலுமி ஜெங்-கே (Zheng He) காலேயில் (Galle) ஒரு கல்வெட்டை நிறுவிச் சென்றான். அக்கல்வெட்டு மூன்று மொழிகளில் உள்ளது. அந்த மூன்று மொழிகள் எவையெல்லாம் தெரியுமா? பாரசீகம், சீனம் மற்றும் தமிழ். அரபியர்களும், சீனர்களும் இதர உலகநாடுகளோடு வணிகத் தொடர்பு கொள்வதற்கு தமிழனின் கடற்படைப் பிரிவுகளே பாதுகாப்பு அளித்தன, அதனாலேயே கிழக்கு ஆசியாவிற்கும், மேற்காசியாவிற்கும் வாணிகமே நிலைபெறத் தொடங்கியது என்பதை அறியும் போது இன்றுள்ள தமிழர்கள் அதே தமிழர்களின் வழியில் வந்தவர்கள் தானா என நம்ப முடியவில்லை. வாணிகக் கப்பல்கள் இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயப் பேரரசின் தூண்டுதலால் கொள்ளையடிக்கப்பட்ட போது அவ்வரசனைத் தண்டிக்கவும், வாணிகத்திற்கானக் கடல்வழிகளைக் காப்பதற்கும் 1025-ம் ஆண்டு இராஜேந்திர சோழன் ஒரு பெரும் கப்பற்படையை அனுப்பினான். அப்படை ஸ்ரீவிஜயப் பேரரசைத் தோற்கடித்தது மட்டுமல்லாது அவ்வரசனையும் சிறைபிடித்துத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தது. அவ்வரசன் தான் செய்த தவறுகளுக்கு ஈடாகப் பொன்னும் பொருளும் வழங்க ஒப்புக்கொணடதோடு சோழர்களின் மேலாதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு ஆண்டுதோறும் திறை செலுத்த ஒப்புக் கொண்டான். தமிழர்களின் வியாபாரக் கலங்களுக்கு அதுவரை தொல்லை கொடுத்து வந்த கம்போடிய அரசனோ தமிழர்களின் இராணுவ பலத்தைக் கண்டு அஞ்சி சோழ மன்னனுக்குப் பரிசாக ஒரு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த தேரை அனுப்பினான். இன்றைய மலேசியா மற்றும் இந்தோனேஷியாப் பகுதிகளை வென்றதை அடுத்தே இராஜேந்திரச் சோழனுக்குக் 'கடாரம் வென்றான்' என்ற அடைமொழி வழங்கப்பட்டது. சீனாவுக்குச் சென்ற தமிழ் மன்னர்களின் தூதுவர்கள் சீரும் சிறப்புடனும் நடத்தப்பட்டார்கள் எனவும் தமிழர்களின் கடல் வாணிகத்தின் மூலம் தாங்களும் பயன்பெறும் பொருட்டு சீன அரசர்கள் தூதுவர்கள் மூலம் தமிழ் மன்னர்களுக்குக் கப்பல் கப்பலாகப் பரிசுப் பொருட்கள் அனுப்பியதாகவும் வரலாறு சொல்கிறது. குமரி முதல் வங்கம் வரையும், இலங்கைத் தீவு முழுவதும், தென்கிழக்காசியா முழுவதும் ஒரு பரந்து கிடந்தப் பேரரசை ஆண்ட தமிழ்ச் சமூகத்திற்கு இன்று ஏற்பட்ட நிலையை நினைத்தால் ஐயகோ! நெஞ்சு பதைபதைக்கிறது. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவன் வெறும் 30 மைலுக்கப்பால் கொல்லப்படுகிறான், தமிழச்சி என்ற ஒரே காரணத்திற்காக ஒருத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அவயங்கள் சிதைக்கப்படுகிறாள், தமிழ்க் குழந்தைகள் என்ற ஒரே காரணத்திற்காகப் பள்ளியில் காலை அணிவகுப்பில் நிற்கும் குழந்தைகள் குண்டு வீசிக் கொல்லப்படுகிறார்கள், இவர்கள் அனைவரும் இப்போது ஒரு வாய்க் கஞ்சிக்காகத் தட்டைத் தூக்கிக் கொண்டுப் பிச்சைக்காரர்கள் போல் வரிசையில் நிற்கிறார்கள். இதை ஏனென்று கேட்கத் துப்பில்லாதவர்கள் எவனோ விளங்காதவனிடம் எல்லாம் போய் 'கருணை கொள்ளுங்கள்' என்று மன்றாடாத குறையாக மனு கொடுக்கிறார்கள். அதையே தொடர்ந்து செய்ய வேண்டுமென்று சொல்கிறார்கள். இந்தப் பிச்சை கேட்கும் ஈனப் பிழைப்புக்குப் பதிலாகத் தமிழினமே அழிந்து போவது மேல்! இராஜராஜ சோழனுக்கும் இராஜேந்திர சோழனுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் நெடுஞ்சேரலாதனுக்கும் இரும்பொறைக்கும் வாரிசாக வந்தவர்கள் உயிர்ப் பிச்சை கேட்டு மண்டியிடாத இனமே உலகில் இல்லை என்ற அவப் பெயருக்கு உட்படாமல் தமிழினம் அழிவதே மேல்.

Monday, March 2, 2009

ஈழத் தமிழர் பிரச்சனையும் பூகோள அரசியலும்

இன்று ஈழத்தமிழர் மீது திணிக்கப்பட்டுள்ள கொடூரமான இனப்படுகொலைப் போருக்கு என்ன காரணம்; எதற்காக இந்தியா இந்தத் தமிழின அழிப்புக்கு ஆசியும் ஆதரவும் அளிக்கிறது என்பது குறித்துப் பலரும் பலவாறாகக் கருத்துக் கூறி வருகின்றனர். இந்தப்போரே இந்தியாவின் போர்தான் என்றும்; இராஜீவின் சாவுக்காக சோனியா தமிழர்களின் மீது பழிதீர்த்துக் கொள்வதே இந்தப்போர் என்றும்; சிங்கள இனவாதத்தின் உச்சகட்ட வெளிப்பாடே இந்தத் தமிழினஅழிப்புப் போரென்றும்; புலிகளின் சகிப்புத்தன்மையற்ற, ஜனநாயகமற்ற போக்கையும் அவர்கள் செய்த அரசியல் படுகொலைகளையும் கண்டித்தும் அவர்களது தீவிரவாதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடும் பன்னாட்டு அரசுகளால் அங்கிகரிக்கப்பட்டு நடத்தப்படுவதே இந்தப் போரென்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இப்போது நடக்கும் போருக்கான பல காரணங்களில் இவையும் சிலவாக இருக்கலாம். இப்போருக்கு முழுமுதற்காரணம் என ஒன்று உண்டா? அப்படி இருந்தால் அது என்ன? தமிழர்களின் தனிநாடு கோரிக்கை அந்த அளவுக்கு நியாயத்துக்கு ஒவ்வாததா? ஏன் பன்னாட்டு சமூகம் இந்த அளவுக்கு தழிழர் தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிராக இருக்கிறது? தமிழீழ விடுதலைப்புலிகள் அந்த அளவுக்கு மனிதத்தன்மையுள்ள எவரும் வெறுக்கும்படியான அளவுக்குக் கொடூரமான மனிதஉரிமை மீறல்களை இழைக்கும் தீவிரவாதிகளா? ஏன் ஒட்டுமொத்த உலக அரசுகளும் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானதாகவும், முட்டுக்கட்டு ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர்? இலங்கைத் தீவின் நில ஒருமைப்பாடும், அரசியல் இறையாண்மையும் யாரும் தொடக்கூடாத 'புனிதப் பசுவா'? இந்தக் கேள்விகளுக்கு விடைதேடும் முன்னர் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய 'பன்னாட்டு அரசியல் உறவுகள்' குறித்த கருத்துக்கள் உள்ளன. இந்த அடிப்படைப்படைகளைப் புரிந்து கொண்டால் நாம் முதலில் கேட்ட 'இது யாரது போர், எதற்காக இந்தப் போர், ஏன் தமிழர்களுக்கு இந்தப் பரிதாப நிலை, தமிழர்கள் இவ்வளவு சொல்லொண்ணாக் கொடுமைகளையும், நரக வேதனைகளையும், உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடிய அவமானங்களையும் அனுபவிக்க அவர்கள் செய்த பாவம் என்ன? ஆகிய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

பன்னாட்டு அரசியலையும், நாடுகளுக்கிடையேயான உறவுகள், சண்டைகள், சச்சரவுகள், வணிகம் ஆகிய அனைத்தையும் புரிந்து கொள்ளவும், ஆய்வு செய்யவும் பன்னாட்டு அரசியல் தத்துவ நிபுணர்கள் பல கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் வகுத்துள்ளனர். இவற்றுள் 'பூகோள அரசியல்' என்ற கோட்பாடே உலக நாடுகளின் நடவடிக்கைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவுகிறது என்பது ஆராய்ந்து நிறுவப்பட்ட கருத்து. இதை ஆங்கிலதில் ஜியோபாலிடிக்ஸ் (Geopolitics) என்று அழைக்கிறோம். யார் உலகில் அதிகாரம் செலுத்த முடியும், யார் உலகை ஆள முடியும் என்பதற்கு இந்தக் கோட்பாடு பல அறிஞர்களின் கொள்கைகளை முன்வைக்கிறது. 'யுரேஷிய' நிலப்பகுதியை ஆள்பவர்கள் உலகை ஆள்வார்கள் என்பது ஒரு கொள்கை. இது போன்று பல கொள்கைகள். ஒவ்வொரு நாட்டின் யுத்ததந்திரிகளும் எந்தக் கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அதற்கேற்ப அவர்களது வெளியுறவு மற்றும் இராணுவ உத்திகளை வடிவமைக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் ஆசியாதான் என்றான பிறகு 'ஆசியாவை ஆள்பவர்கள் யாரோ அவர்களே உலகை ஆள்வார்கள்' என்ற பூகோளக் கோட்பாடு உறுதியாகி விட்டது. 20-ம் நூற்றாண்டின் பின்பகுதி தொடங்கி 21-ம் நூற்றாண்டிலும் ஆசிய நாட்டில் ஒன்றான சீனாவே அனைவரையும் பிரமிக்கவைக்கும் அளவில் வளர்ந்து தனது பலத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்ட நிலையில் இந்த 'ஆசியக் கட்டுப்பாடு போட்டி' அதிகரித்துள்ளது.

சரி...அதெல்லாம் சரி. பூகோள அரசியலுக்கும், உலகை ஆள்வதற்கும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவில் உள்ள தமிழர்களுக்கும் என்ன தொடர்பு? தொடர்பே அந்தக் கடலின்தான் உள்ளது. ஆசியாவின் கடல்வழிகளைக் கட்டுப்படுத்துதல் ஆசியாவையே கட்டுப்படுத்துவதற்குச் சமம். கடல்வழிகள் இல்லாமல் உலகப் பொருளாதார ஓட்டத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்ற அளவுக்கு உலகப் பொருளாதாரம் கடல் வாணிக வழிகளோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. ஆசியாதான் பொருளாதாரத்தின் எதிர்காலம் என்ற பிறகு 'இந்தியப் பெருங்கடலை ஆள்பவர்கள்தான் உலகையே ஆளப்போகிறார்கள். 20-ம் நூற்றாண்டில் அட்லாண்டிக் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தனவோ அதைவிட அதிமுக்கியமானதாக இந்தியப் பெருங்கடல் மாறிவருகிறது. சீனாவிற்குத் தேவையான 90% எரிபொருள், எண்ணெய் மற்றும் தாதுப் பொருள் ஆதாரங்கள் இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் செல்கிறது. தமிழர்கள் செய்த பாவமெல்லாம் இந்த உலகப் பொருளாதார இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழியில் தங்கள் வாழ்விடங்களைக் கொண்டிருப்பது தான். இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தாய்த்தமிழகத்து மக்களுக்கும் பொருந்தும். தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க ஆயத்தமாகும் ஒரு கட்டமாகத்தான் சீனா இலங்கைத்தீவின் விவகாரங்களில் தலையிட ஆரம்பித்திருக்கிறது. தீவு சிங்களர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்தியப் பெருங்கடலைக் கட்டுக்குள் கொண்டுவர துடிக்கும் ஒவ்வொரு உலக நாடும் சிங்கள அரசிற்குப் பொருளாதார சலுகைகளும் இலங்கை இராணுவத்திற்குப் போர்க்கருவிகளும் பன்னாட்டு மன்றங்களில் ஆதரவும் அளித்து வருகின்றன. ஏற்கனவே சீனா தான் செய்யும் இராணுவ பொருளாதார உதவிகளுக்குக் கைம்மாறாக 'ஹம்பன்தோட்டா' துறைமுகத்தை உருவாக்கும் பொறுப்பைப் பெற்றுக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் சீனக் கப்பற்படையை இலங்கைத் தீவின் தென்விளிம்பில் நிலைகொண்டிருக்கக் காணலாம்.

அமெரிக்கர்கள் 1980-களில் இருந்து இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட ஆரம்பித்தார்கள். அவர்களது திடீர் ஆர்வத்துக்குக் காரணம் திரிகோணமலைத் துறைமுகம் தான். சீனா பொருளாதார வளர்ச்சியில் வேகநடை போட ஆரம்பித்த உடனேயே அமெரிக்க யுத்த தந்திர நிபுணர்கள் எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பெறப்போகும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தார்கள். டைகோ கார்சியாவில் (இலங்கைக்குத் தெற்கே 1500 மைல் தொலைவில் உள்ள ஒரு மிகச் சிறிய தீவு Diego Garcia) உள்ள அமெரிக்கக் கப்பற்படையின் 15-வது பிரிவு மேற்கண்ட புதிய பொருளாதார மாற்றம் உருவாக்கும் சூழ்நிலையில், அமெரிக்க தேசிய நலன்களைப் பாதுகாக்கப் போதுமானதாக இருக்காது. இதனாலேயே அப்போதைய இலங்கைப் பிரதமர் J.R. ஜெயவர்த்தனே மற்றும் அமெரிக்க அதிபர் ரீகன் ஆகியோருக்கிடையில் திரிகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கக் கப்பற்படைத் தளத்திற்கு வழங்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. இரஷ்யக் குழுமத்தில் இருந்த இந்தியா இதனைத் தடுப்பதற்காகவே தமிழர் இனப்பிரச்சனையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை 1987-ல் சிங்கள அரசின் மீதும் தமிழரின் விடுதலைப் போராட்டக் குழுக்கள் மீதும் வலுக்கட்டாயமாகத் திணித்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு இரகசிய பிரிவு, இலங்கை இந்தியாவின் அனுமதியின்றி திரிகோணமலைத் துறைமுகத்தை எந்த நாட்டுக்கும் தாரை வார்க்க முடியாது என்று கூறுகிறது. இதன் ஒரு அங்கமாகவே இந்தியா அங்குள்ள எண்ணெய டாங்கர்களையும் நிரந்தரக் குத்தகைக்கு எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் புஷ்ஷின் 'தீவிரவாத எதிர்ப்புப் போர்' காலம் தொடங்கிய பின் அமெரிக்கர்களின் கவனம் மீண்டும் திரிகோணமலை துறைமுகம் மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்திற்கருகில் உள்ள பலாலி விமானதளத்தின் மீதும் திரும்பியுள்ளது. இவை இரண்டும் தமிழரின் தாயகப் பகுதியில் இருப்பதால் தமிழினப் பிரச்சனை தீராமல் தாங்கள் பயன்படுத்த முடியாது என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். இதனாலேயே நார்வே மூலமாக சமாதனம் பேசுவதாகக் கூறி போரில் கை ஓங்கியிருந்த விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தை என்று வஞ்சகம் பேசி அழைத்துப் போர் நிறுத்தம் செய்து கடந்த 7 ஆண்டுகளாக புலிகளை ஒழிக்கச் சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்களும் பயிற்சியும் அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் பொருளாதார மற்றும் ஆயுதம் வாங்கும் அமைப்புகளையும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் முற்றாக ஒடுக்கி வருகிறது.

இனப்பிரச்சனையை நேர்மையான முறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகளிடம் பேசி சுமூகத் தீர்வு காணாமல் வன்முறைக்கு மூலகாரணமான இனவெறி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுத் தங்களது தேசிய நலன்களை உறுதி செய்வதிலேயே ஒவ்வொரு நாடுகளும் குறியாக இருக்கின்றன. உலக அமைதி, மனித உரிமை பாதுகாப்பு ஆகியவற்றிற்காகப் பணியாற்றுவதாக பிதற்றிக் கொள்ளும் உலகளாவிய அமைப்புகள் அனைவரும் பொருளாதார மற்றும் இராணுவ பலமிக்க நாடுகளின் ஏவலாளிகளாகவே செயல்படுகின்றன. கடந்த மாதம் அமெரிக்க இராணுவம் ஹிந்தி மற்றும் தமிழ் பேசுபவர்கள் அமெரிக்க இராணுவத்தில் சேர முன்னுரிமை அளிப்பதாக அறிவித்திருப்பதன் மூலம் அமெரிக்கர்களின் இராணுவ நோக்கம் இப்போது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. அமெரிக்கர்களின் இராணுவத் தலையீடு எவ்வளவு கேடு என்பது ஈராக்கையும், ஆப்கானிஸ்தானத்தையும், பாகிஸ்தானத்தையும் பார்த்தால் தெரியும். தமிழக இளைஞர்கள் விழிப்படைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க நேரமில்லை. ஈழத்தமிழர்களைக் காக்கும் இப்போராட்டம் எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய இன்னும் கடுமையான சூழ்நிலைகளைச் சந்திக்க நம்மைத் தயார் செய்யும் களமாகும். ஈழத் தமிழர்களின் தோல்வி எதிர்காலத்தின் ஒட்டு மொத்தத் தமிழர்களின் தோல்வியாகவே முடியும். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை வெற்றியடைய வைப்பதே நமது இன்றைய முழுமுதற் கடமையாக இருக்க வேண்டும்.

உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முழங்குவோம்!