Friday, October 17, 2008

இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சியடையவது ஏன்?

2007 தொடக்கத்திலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்து வந்தது. ஒரு அமெரிக்க டாலருக்கு 39 சொச்ச ரூபாய் என்ற அளவுக்கு செலாவணி விகிதம் ரூபாய்க்கு சாதகமாக மாறியது. இதனால் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட திருப்பூர் போன்ற ஆயத்த ஆடை மையங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப மென்பொருள் துறை ஆகியவை பெரும் நட்டங்களைச் சந்திக்க வேண்டிய நிலை வந்தது. அதே நேரத்தில் இறக்குமதியைச் சார்ந்திருந்த தொழில்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அப்போது குறைய இந்திய ரூபாய்களைச் செலவழிக்க வேண்டிய சாதகமான சூழ்நிலை நிலவியது. ஏனென்றால் ஏற்றுமதியானுலும் இறக்குமதியானாலும் உலக நாடுகள் அமெரிக்க டாலரில் மட்டுமே புழங்குவதை விரும்புகிறார்கள். எனவே நாம் பன்னாட்டு அமைப்பில் தொழில் நடத்த விரும்பினால் முதலில் நம் பணத்தை டாலருக்கு மாற்றியாக வேண்டும். அது போலவே நமக்கும் கிடைக்க வேண்டிய தொகைகள் டாலரிலேயே தரப்படும். இந்திய ரூபாய் டாலருக்கு எதிராகப் பலம் பெற்றதற்கு வளர்ந்து வரும் இந்திய உற்பத்தித் துறையே என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஜூன் வாக்கிலிருந்து இந்த நிலைமை மாறத் தொடங்கியது. பண வீக்கத்தினால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படத் தொடங்கியது. பன்னாட்டுச் சந்தையில் எண்ணை விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவுக்கு அதிகரித்ததே காரணமாகப் பெரும்பாலும் கருதப்படுகிறது. இந்தியா பெரும்பாலனத் தன் எண்ணைத் தேவைக்கு எண்ணை இறக்குமதியையே நம்பியிருப்பதால் அதிகமான டாலர்களைச் செலவழிக்க வேண்டி வந்தது. டாலருக்குத் தேவை அதிகரிக்கும் போதெல்லாம் அந்த ரூபாய்க்கு எதிரான டாலரின் செலாவணி மதிப்பு அதிகரிக்கிறது. இதனால் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு 43, 44 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த நிலையில் தான் அமெரிக்கா தொடங்கி பின்னர் ஐரோப்பா மற்றும் இதர முதலாளித்துவ பொருளாதரங்கள் வாராக்கடன்களாக மாறிய தரம் குறைந்த அடமானக் கடன்கள் (Subprime Mortgage Debts)பாதிக்கத் தொடங்கின. இந்த தரம் குறைந்த அடமானக் கடன்களின் (Subprime Mortgage Debts) மதிப்பு கிட்டத்தட்ட ஏழெட்டு ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும் போலத் தெரிகிறது. ஒரு ட்ரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடியாகும். இந்திய ரூபாயி என்றால் 45 லட்சம் கோடி. அதுவும் ஏழெட்டு 45 லட்சம் கோடிகள். நினைக்கவே தலைசுற்றலாம். ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆயிரம் நேரம் விற்றாலும் இந்தத் தொகை தேராது. இந்தப் பொருளாதார அவலத்தால் பல் முன்னணியான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் பிச்சைக்காரர்களாயின...அதாவது திவாலாயின. அன்றாடப் புழக்கத்திற்கு யாரிடமும் காசில்லை. வங்கிகள் ஒருவருக்கொருவர் கடன் கொடுக்கவும் தயாராயில்லை. இந்த நிலையில் பன்னாட்டு அரசாங்கங்கள் தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள வங்கிகள் மற்றும் பிற பொருளாதார நிறுவனங்களை மீட்பதற்கு அரசு கஜானா அதாவது அரசின் மத்திய வங்கிகளிலிருந்து பணம் வழங்க திட்டங்களை அறிவிக்கத் தொடங்கினர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 700 பில்லியன் டாலர்கள் மீட்புத் தொகைத் திட்டத்தை அறிவித்தார். அதற்கு முன்பே கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சில சொத்து அடமான நிறுவனங்களை அரசுடைமையாக்கச் செலவு செய்தார். இதனால் உலகின் மற்றப் பங்குச் சந்தைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர்கள் அமெரிக்க மத்திய வங்கிக்குள் வெள்ளமெனப் பாயத் தொடங்கின. இதனால் அனைத்துப் பணங்களுக்கு எதிராகவும் டாலரின் மதிப்பு உயர ஆரம்பித்தது. இந்தியா போன்ற எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் மிகவும் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளன. அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறார். இந்நிலையில் அதிகமான உற்பத்திச் செலவால் இந்திய உற்பத்தித் தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனையே முழுக்க முழுக்க நம்பியிருக்கும் இந்திய இதனால் இந்திய தகவல் தொடர்பு தொழில்நுட்ப மென்பொருள் துறையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சுற்றுலாத்துறை, விடுதி மற்றும் உணவகங்கள் ஆகிய அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை இந்த ஆண்டும் இன்னும் வரும் ஆண்டுகளிலும் கடுமையாகப் பாதிக்கலாம். இப்போதைக்கு இந்திய தேசிய ஊடகங்கள் மிகவும் மிகைப்படுத்தித் தம்பட்டம் அடித்து வந்த 'அதிவேக இந்திய வளர்ச்சி' என்னும் புராணக் கதை தற்காலிக முடிவுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

No comments: