Saturday, March 7, 2009

தமிழினம் அழிவதே மேல்!

நாம் ஜப்பானியப் பொருட்களை மதிக்கிறோம். அண்மைக் காலங்களில் சீனப் பொருட்களையும் அரவணைக்கத் தொடங்கி விட்டோம். ஆனால் ஜப்பானியர்களோ, சீனர்களோ தமிழர்களின் உயிரைத் துரும்பாகவும் மதிப்பதாகத் தெரியவில்லை. பெரும்பான்மை சிங்களர்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக புத்த மதவெறி பிடித்த ஜப்பானியர்கள் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று அறிந்தும் தெரிந்தும் தங்களது புத்த சகோதரர்களான இனவெறிச் சிங்களர்களுக்குத் தாராளமான பணத்தை வாரி வழங்குகிறது. சீனர்களோ இந்தியப் பெருங்கடலில் மேலாதிக்கம் செய்யும் பொருட்டு இலங்கையில் கப்பற்தளம் அமைக்க சிங்கள அரசின் ஒத்துழைப்புக்காக படுபயங்கரமானப் போர் ஆயுதங்களை வாரி வழங்குவதோடு தமிழர்களின் இனப்படுகொலையை ஐ.நா-வில் விவாதப் பொருளாக எடுக்க எந்த நாடாவது முன்மொழியும் போது தனக்குள்ள சிறப்பு வீடோ அதிகாரத்தால் விவாதம் நடக்காமல் முறியடித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளும், தாய்மார்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டும் உடல் சிதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வரும் இவ்வேளையில் ஜப்பான் சிங்கள இனவெறி அரசுக்கு 350 மில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய்) வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புத்தரும் காந்தியும் பிறந்ததாகப் பிதற்றிக் கொள்ளும் தில்லிப் பேரரசோ வட்டியில்லாக் கடனாக தமிழன் கட்டிய வரிப்பணத்தையே 4500 கோடி அளவுக்கு தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்த இனவெறி பிடித்தச் சிங்கள அரசுக்குத் தாரை வார்த்துள்ளது. தமிழன் என்ன கிள்ளுக்கீரையா? அப்படித்தான் தெரிகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் போக்கைப் பாருங்கள்! உணர்ச்சி கெட்ட முண்டங்கள் போல் சினிமாவிலும், சில்லறை அரசியலிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

இந்த இனமா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியப் பெருங்கடல் அனைத்தையும் ஆண்டு உலக வாணிகத்தில் கொடிகட்டிப் பறந்த்தது என்று ஐயமுறத் தோன்றுகிறது? 15-ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த சீன மாலுமி ஜெங்-கே (Zheng He) காலேயில் (Galle) ஒரு கல்வெட்டை நிறுவிச் சென்றான். அக்கல்வெட்டு மூன்று மொழிகளில் உள்ளது. அந்த மூன்று மொழிகள் எவையெல்லாம் தெரியுமா? பாரசீகம், சீனம் மற்றும் தமிழ். அரபியர்களும், சீனர்களும் இதர உலகநாடுகளோடு வணிகத் தொடர்பு கொள்வதற்கு தமிழனின் கடற்படைப் பிரிவுகளே பாதுகாப்பு அளித்தன, அதனாலேயே கிழக்கு ஆசியாவிற்கும், மேற்காசியாவிற்கும் வாணிகமே நிலைபெறத் தொடங்கியது என்பதை அறியும் போது இன்றுள்ள தமிழர்கள் அதே தமிழர்களின் வழியில் வந்தவர்கள் தானா என நம்ப முடியவில்லை. வாணிகக் கப்பல்கள் இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயப் பேரரசின் தூண்டுதலால் கொள்ளையடிக்கப்பட்ட போது அவ்வரசனைத் தண்டிக்கவும், வாணிகத்திற்கானக் கடல்வழிகளைக் காப்பதற்கும் 1025-ம் ஆண்டு இராஜேந்திர சோழன் ஒரு பெரும் கப்பற்படையை அனுப்பினான். அப்படை ஸ்ரீவிஜயப் பேரரசைத் தோற்கடித்தது மட்டுமல்லாது அவ்வரசனையும் சிறைபிடித்துத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தது. அவ்வரசன் தான் செய்த தவறுகளுக்கு ஈடாகப் பொன்னும் பொருளும் வழங்க ஒப்புக்கொணடதோடு சோழர்களின் மேலாதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு ஆண்டுதோறும் திறை செலுத்த ஒப்புக் கொண்டான். தமிழர்களின் வியாபாரக் கலங்களுக்கு அதுவரை தொல்லை கொடுத்து வந்த கம்போடிய அரசனோ தமிழர்களின் இராணுவ பலத்தைக் கண்டு அஞ்சி சோழ மன்னனுக்குப் பரிசாக ஒரு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த தேரை அனுப்பினான். இன்றைய மலேசியா மற்றும் இந்தோனேஷியாப் பகுதிகளை வென்றதை அடுத்தே இராஜேந்திரச் சோழனுக்குக் 'கடாரம் வென்றான்' என்ற அடைமொழி வழங்கப்பட்டது. சீனாவுக்குச் சென்ற தமிழ் மன்னர்களின் தூதுவர்கள் சீரும் சிறப்புடனும் நடத்தப்பட்டார்கள் எனவும் தமிழர்களின் கடல் வாணிகத்தின் மூலம் தாங்களும் பயன்பெறும் பொருட்டு சீன அரசர்கள் தூதுவர்கள் மூலம் தமிழ் மன்னர்களுக்குக் கப்பல் கப்பலாகப் பரிசுப் பொருட்கள் அனுப்பியதாகவும் வரலாறு சொல்கிறது. குமரி முதல் வங்கம் வரையும், இலங்கைத் தீவு முழுவதும், தென்கிழக்காசியா முழுவதும் ஒரு பரந்து கிடந்தப் பேரரசை ஆண்ட தமிழ்ச் சமூகத்திற்கு இன்று ஏற்பட்ட நிலையை நினைத்தால் ஐயகோ! நெஞ்சு பதைபதைக்கிறது. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவன் வெறும் 30 மைலுக்கப்பால் கொல்லப்படுகிறான், தமிழச்சி என்ற ஒரே காரணத்திற்காக ஒருத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அவயங்கள் சிதைக்கப்படுகிறாள், தமிழ்க் குழந்தைகள் என்ற ஒரே காரணத்திற்காகப் பள்ளியில் காலை அணிவகுப்பில் நிற்கும் குழந்தைகள் குண்டு வீசிக் கொல்லப்படுகிறார்கள், இவர்கள் அனைவரும் இப்போது ஒரு வாய்க் கஞ்சிக்காகத் தட்டைத் தூக்கிக் கொண்டுப் பிச்சைக்காரர்கள் போல் வரிசையில் நிற்கிறார்கள். இதை ஏனென்று கேட்கத் துப்பில்லாதவர்கள் எவனோ விளங்காதவனிடம் எல்லாம் போய் 'கருணை கொள்ளுங்கள்' என்று மன்றாடாத குறையாக மனு கொடுக்கிறார்கள். அதையே தொடர்ந்து செய்ய வேண்டுமென்று சொல்கிறார்கள். இந்தப் பிச்சை கேட்கும் ஈனப் பிழைப்புக்குப் பதிலாகத் தமிழினமே அழிந்து போவது மேல்! இராஜராஜ சோழனுக்கும் இராஜேந்திர சோழனுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் நெடுஞ்சேரலாதனுக்கும் இரும்பொறைக்கும் வாரிசாக வந்தவர்கள் உயிர்ப் பிச்சை கேட்டு மண்டியிடாத இனமே உலகில் இல்லை என்ற அவப் பெயருக்கு உட்படாமல் தமிழினம் அழிவதே மேல்.

No comments: